கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, உயிரிழந்த நபரின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்தனர். பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் மாதவச்சேரியைச் சேர்ந்த இளையராஜா மற்றும் ஜெயமுருகன் ஆகியோர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தாகவும், ஆனால் அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதன்பேரில், புதைக்கப்பட்ட ஜெயமுருகன் உடலை தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால், எரியூட்டப்பட்ட இளையராஜாவின் உடலை உடற்கூராய்வு செய்ய முடியாது என்பதால், அரசின் நிவாரணம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.