டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில், அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு ஏற்கெனவே தடை விதித்த நிலையில், அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவருக்கு கடந்த ஜூன் 20-இல் ஜாமீன் வழங்கியது.
அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. ஏற்கெனவே ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சுதிர்குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சமர்ப்பித்த ஆவணங்களை கீழமை நீதிமன்றம் முறையான பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்று கூறிய நீதிபதி, கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்தார்.
















