“மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு போதையினால் இருண்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது” எனவும், “இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் போதைப் பொருள் எதிர்ப்பு தின நிகழ்வு நடைபெற்றது. இதில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பதாகையை ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டார்.
மேலும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகையை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்என். ரவி, “போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது” எனவும், இதன் மூலம் கலாசாரம் பாதிக்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், “போதைப் பொருட்கள் தமிழகத்தை பெரிய அளவில் பாதிக்கிறது” எனவும், “போதைப் பொருளுக்கு அடிமையாகி பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன” என்றும் குறிப்பிட்டார்.
“மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு போதையினால் இருண்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது” எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவின் வேதனையுடன் கூறினார்.