சரக்கு மற்றும் சேவை வரி GST நடைமுறைக்கு வந்த பின், மாவு, அழகுசாதனப் பொருட்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பெரும்பாலான வீட்டுப் பொருட்களின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்று, மத்திய மற்றும் மாநில வரிகள் சட்டத்தில் திருத்தம் செய்து புதியதாக, சரக்கு மற்றும் சேவை வரி GST சட்டங்கள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டன. இந்திய ஜிஎஸ்டியின் கீழ், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் உள்ளிட்ட பல்வேறு வரி அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
18-வது மக்களவையில் , நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில் கடந்த வாரம் புது டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முடிவுசெய்யப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் விரைவில் சுற்றறிக்கைகள்,அறிவிப்புகள், சட்டத் திருத்தங்கள் மூலம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், ((Central Board of Indirect Taxes and Customs (CBIC) ))மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), சரக்கு மற்றும் சேவை வரி GST நடைமுறைக்கு வந்தபின் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
GST நடைமுறைக்கு வந்த பின், அழகு சாதனப் பொருட்கள், மொபைல் போன்கள்,எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிஸ் பொருட்கள், மின்விசிறி, குளிர் சாதனப் பொருட்கள், கட்டில், நாற்காலி,மேஜை, குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு வகைகள் மற்றும் LPG அடுப்புகள் ஆகிய பொருட்களின் விலைகள் 18 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
GST வருகைக்கு முன் கிட்டத்தட்ட 31.3 சதவீதம் அதிகமாக இருந்த இந்த பொருட்களின் விலைகள், இப்போது 22 சதவீதம் குறைந்திருப்பது, நாட்டின் GDP வளர்ச்சிக்கான அறிகுறி என்று பார்க்கப்படுகிறது.
இதனை சுட்டிக்காட்டி, சரக்கு மற்றும் சேவை வரியின் பலன்களை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.
ஜிஎஸ்டி அமலுக்கு முன்னும் பின்னும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, தனது அரசு பொருளாதார சீர்திருத்தங்களில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக பொருளாதார சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்ப படுவதாக கூறியிருக்கும் பிரதமர் மோடி, ‘ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு, வீட்டு உபயோகப் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாகவும், அதனால், ஏழை மற்றும் எளிய மக்களின் பணச் சேமிப்பும் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, மக்களின் வாழ்க்கையைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான சீர்திருத்தப் பயணத்தைத் தொடர கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
2021 – 2022ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக வாங்கிய 2.69 லட்சம் கோடி ரூபாய் கடனை, நவம்பர் 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் திருப்பிச் செலுத்த திட்டமிடப்பட்டது என்றாலும், அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே, மத்திய அரசால் அந்த கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பின், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும், மக்களின் சேமிப்பு வளர்வதாகவும் , பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.