புதுச்சேரியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி சீரழிப்போர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சேரி காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு போதை எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் மற்றும் காவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அவர், தீய பழக்கங்கள் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிடும் என்றார். போதைப்பொருள் பழக்கத்தால் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என கூறிய அவர், மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி சீரழிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், டிஜிபி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.