நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினரின் வாக்கு சதவீத வீழ்ச்சிக்கு காரணமாக பாஜக தொண்டர்களின் உழைப்பு இருந்திருக்கிறது என மத்திய அமைச்சர் சிவராஜ் சின் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினரின் வாக்கு சதவீதம் 33 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாக வீழ்வதற்கு பாஜக தொண்டர்களின் உழைப்பு காரணமாக இருந்திருக்கிறது எனவும் பாராட்டினார்.
இந்த முடிவுகள் தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதையே காட்டுகிறது எனவும், கேரளாவிலும் பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தமிழின் பெருமையை உணர்ந்து நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவரே அதனை இழிவுபடுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது சட்டசபையிலும் செங்கோல் நிறுவப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் மதுவை வழங்கி இளைஞர் சக்தியை வீணடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.