இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் முதல் தமிழ் எம்பியாக தேர்வாகி சாதனை படைத்திருக்கிறார்.
யார் இந்த உமா குமரன் ? என்ன பின்னணி என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
பிரிட்டனில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக் பதவி காலம் 2025ம் ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. என்றாலும் பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே தேர்தலைச் சந்தித்தார்.
இதனால் கடந்த ஜூன் 4ம் தேதி பிரிட்டனில் ஒரே கட்டமாக house of commons எனப்படும் கீழவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், கெயர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 400-க்கும் அதிகமான இடங்களை கெயர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி கைப்பற்றியது. 14 ஆண்டு கால கன்செர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய கெயர் ஸ்டார்மர் பிரிட்டன் புதிய பிரதமராகி இருக்கிறார்.
தொழிலாளர் கட்சி சார்பில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் தொகுதியில் போட்டியிட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார்.
கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்த உமா குமரனின் தாய் தந்தையர் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கடந்த எண்பதுகளில், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது பிரிட்டனுக்குக் புலம் பெயர்ந்தனர்.
பிரிட்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உமா குமரன், தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வரும் உமா குமரன், தனது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்று பெருமையுடன் கூறுகிறார்.
பல்வேறு சமூக அமைப்புளுடன் இணைந்து பணியாற்றி வந்தாலும், கடந்த 2015 ஆம்ஆண்டு முதல் தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல் பட்டு வருகிறார்.
பாலஸ்தீன பிரச்சனை, காலநிலை மாற்றம், சர்வதேச அளவில் தமிழ் மக்களின் முன்னேற்றம், சொந்த தொகுதி மக்களுக்கு மலிவு விலையில் வீடு, அதி விரைவான மருத்துவ சேவை, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் முறையான தொகுதி நிதி செலவினம் போன்ற வாக்குறுதிகளை இந்த தேர்தலில் உமா குமரன் வழங்கி இருந்தார்.
உமா குமரன் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய பிரிட்டிஷ் தமிழ் வேட்பாளர்கள் பலர் வெற்றிப் பெற்றுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் கவின் ஹரன், சவுத்எண்ட் ஈஸ்ட் மற்றும் ரோச்ஃபோர்டு தொகுதியிலும், பசுமைக் கட்சியைச் சேர்ந்த நரனீ ருத்ரா-ராஜன், ஹேமர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சியின் கமலா குகன் ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் தொகுதியிலும், சீர்திருத்த யுகே கட்சியின் மயூரன் செந்தில்நாதன், எப்சம் & ஈவெல் தொகுதியிலும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.தொழிலாளர் கட்சியின் டெவினா பால், ஹேம்பிள் தொகுதியிலும், கிரிஷ்னி ரேஷேகரோன் சுட்டன் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் அதிகப் படியான தமிழ் வம்சாவளியினர் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது , இங்கிலாந்து அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதைக் காட்டுகிறது.
தொகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் செல்லும் இவர்களுக்கு , உலக நாடுகளில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.