மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற “தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடுவோம்” என்ற மாபெரும் இயக்கத்தில் இன்று (07.07.2024) பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்,
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, ‘தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும்’ இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு நபரும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
நாடு முழுவதும் 140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். இயற்கை அன்னையின் மீது மரியாதை செலுத்தி, நமக்கு உயிர் கொடுத்த அன்னைக்கும் மரியாதை செலுத்தி, பசுமையை ஏற்படுத்துவது நமது கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மரக் கன்று நடும் இயக்கத்தில் மத்தியப் பிரதேச அரசின் முயற்சிகளை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ்,
பண்டைய காலங்களிலிருந்தே, இந்தூர், உஜ்ஜைனி நகரங்கள் சூழல் பாதுகாப்பில் பங்கு வகித்துள்ளதாகக் கூறினார். இந்தூர் 7 ஆறுகளின் பிறப்பிடமாகும் என்று அவர் தெரிவித்தார். தூய்மையான நகரம் என்பதுடன் பசுமையான நகரம் என்பதிலும் இந்தூர் நிச்சயமாக முதலிடத்தைப் பிடிக்கும் என்று மோகன் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா
இந்தூரின் பசுமைப் பரப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். 51 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மரக் கன்று நடும் இயக்கத்தின் கீழ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தமது மறைந்த தாயார் லீலாபாய் ஸ்ரீ பூனம்சந்த் யாதவின் நினைவாக ஒரு மரக் கன்றை நட்டார். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தமது தாயார் திருமதி சந்தாரா யாதவின் நினைவாக ஒரு மா மரக் கன்றை நட்டார்.