இந்தியப் பிரதமரின் வருகைக்கு ஆஸ்திரியப் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவுக்குக் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தருவதற்கு வரவேற்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரதமர் கார்ல் நெஹம்மர் தெரிவித்த கருத்துகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
“நாற்பது ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக வருகை தருவது சிறப்பு மிக்கதாகும். இந்தியாவுடனான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது அமைகிறது” என்று ஆஸ்திரியப் பிரதமர் கார்ல் நெஹம்மர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில் பிணைப்புகளை வலுப்படுத்துவது பற்றியும் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் பேச்சுகளை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியப் பிரதமர் கார்ல் நெஹம்மரின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
“நன்றி, பிரதமர் கார்ல் நெஹம்மர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஆஸ்திரியாவுக்குப் பயணம் மேற்கொள்வது எனக்குப் பெருமை அளிக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைக் கண்டறிவதும் குறித்த நமது விவாதங்களை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் சிறந்த மதிப்புகளை நாம் கொண்டுள்ளோம். இவை நெருக்கமான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.