பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்த நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கு விசாரணையை 15 மாதத்தில் முடிக்க வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையாக கொண்டு செயல்பட்ட ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் நிறுவனம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் 5 ஆயிரம் கோடி முதலீடுகளை வசூலித்துள்ளது.
ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், கபில், வீரசக்தி உள்ளிட்டோர் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் ஜாமினை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியது.
அவர்களிடம் முதலீடு செய்தவர்களின் விபரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் ஆகிய முழு விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.