அதிகமாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையை வேண்டாம் என்று கூறி தாம் கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறார் ராகுல் டிராவிட். அது பற்றி பார்ப்போம்.
அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்று கோடிக்கணக்கான ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கான காரணகர்த்தாக்களில் மிகவும் முக்கியமானவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஒரு கிரிக்கெட்டராக, ஒரு கேப்டனாக எந்த மண்ணில் தோற்றாரோ அங்கேயே ஒரு பயிற்சியாளராக வென்று காட்டினார் அவர்.
டிராவிட்டின் கிரிக்கெட் கேரியரை சற்று திரும்பி பார்த்தால் சாதனைகளும் சிறப்புகளும் நிறைந்திருக்கின்றன. டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று போற்றப்பட்ட டிராவிட் அந்த FORMAT-ல் 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். முதன்முதலாக பங்கேற்ற 1999 உலகக்கோப்பையில் அதிக ரன்களை அடித்தவர். 22 வருடங்களுக்கு பிறகு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.
இப்படி பல பெருமைகள் இருந்தாலும் 2007-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது. கடைசி போட்டியில் தோற்ற போது பெவிலியனில் கண்ணீர் சிந்தியபடி டிராவிட் அமர்ந்திருந்த புகைப்படத்தை மறக்க முடியாது. ஆனால் ஒட்டுமொத்த தோல்விக்கும் கேப்டன் என்ற முறையில் டிராவிட் பொறுப்பாக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அவமானப்படுத்தப்பட்டார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சில காலம் விளையாடிய டிராவிட் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
ஒரு கேப்டனாக தம்மால் செய்ய முடியாததை பயிற்சியாளராக செய்து காட்டினார் டிராவிட். 2018-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கு டிராவிட்டின் பயிற்சியே காரணம். பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளரான அவர் 2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நம் வீரர்கள் இறுதிப்போட்டி வரை செல்ல வழிவகுத்தார். அப்போது கை நழுவிய கோப்பை தற்போது டி20-ல் வசமாகியிருக்கிறது. அதுவும் எங்கே??? எந்த வெஸ்ட் இன்டீசில் தோற்றாரோ அந்த இடத்திலேயே உலகக்கோப்பையை கையில் ஏந்தி தமது 17 ஆண்டுகால காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் டிராவிட்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக இருந்த 15 வீரர்களுக்கும் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவுக்கும், அணியின் உதவியாளர்களுக்கும் சேர்த்து 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இதில் வீரர்கள் 15 பேருக்கும் டிராவிட்டுக்கும் தலா 5 கோடி ரூபாயும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோருக்கு தலா இரண்டரை கோடியும் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. எனினும் சக பயிற்சியாளர்களுக்கு வழங்கும் இரண்டரை கோடி ரூபாயே தமக்கும் போதும் என டிராவிட் தெரிவித்துவிட்டார்.
அவரது இந்தச் செயலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலரும் பாராட்டியுள்ளனர். 2018-ஆம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற போதும் தமக்கு கூடுதல் பரிசுத் தொகை வேண்டாம் என்றும் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.