இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை தவிர அரிய வகை கனிமங்களைக் கொண்ட ஆர்க்டிக் பகுதியிலும், முதலீடுகளுக்கான வாய்ப்புகளை இந்தியா திறந்திருக்கிறது. இதற்கான கூட்டுப் பிரகடனத்தில், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
ஆர்க்டிக் வழியாக வடக்கு கடல் வழியை (என்எஸ்ஆர்) உகந்த முறையில் பயன்படுத்துவது குறித்தும், அந்த நிலப்பரப்பில் அணுசக்தியால் இயங்கும் பனிக்கட்டி உடைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்தும் விவாதித்த பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் சீனாவுக்கு செக் வைத்துள்ளனர்.
ஆர்க்டிக் பகுதி பூமியின் வடக்குப் பகுதியில், வட துருவத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
இதில் ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் கனடா, ரஷ்யா, அமெரிக்கா, நார்வே மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பகுதிகள் உள்ளன.
ஆர்க்டிக் பகுதி உலகின் மிக கடுமையான குளிர் வெப்ப பிரதேசமாக விளங்குகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் பனிக்கட்டிகள் பெரும்பாலான பகுதிகளை மூடி விடுகிறது. பெரும்பாலும் வெப்பநிலை உறைபனிக்கு கீழே குறைந்திருக்கிறது.
ஆர்டிக் சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் ஆர்க்டிக் பகுதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆர்க்டிக் துருவ கரடிகள், பனிப்பிரதேச திமிங்கலங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள், உயிரினங்கள் உட்பட ஒரு தனித்துவமான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை இந்த ஆர்க்டிக் பகுதி கொண்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் நிலக்கரி, ஜிப்சம், வைரங்கள், துத்தநாகம், ஈயம், தங்கம் மற்றும் குவார்ட்ஸ் ஆகியவை கணிசமாக இருப்புக்கள் உள்ளன.
உலகின் அரிய வகை புவி இருப்புக்களில் 25 சதவீதத்தை கிரீன்லாந்து நாடு மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் ஆர்க்டிக்கில் ஆய்வு செய்யப்படாத ஹைட்ரோகார்பன் வளங்கள் அதிகமாக உள்ளன. உலகின் கண்டுபிடிக்கப்படாத இயற்கை எரிவாயுவில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை ஆர்க்டிக்கில் உள்ளது.
ஆர்க்டிக் கடல் பனி கிரகத்தின் உச்சியில் ஒரு பெரிய வெள்ளை மலையாக செயல்படுகிறது. சூரியனின் ஒளி கதிர்களை மீண்டும் விண்வெளியில் பரவ செய்து , பூமியை சமமான வெப்பநிலையில் வைத்திருக்க ஆர்க்டிக் உதவுகிறது. புவிசார் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருகிறது.
ஆர்க்டிக் மற்றும் இமயமலை , புவியியல் ரீதியாக தொலைவில் இருந்தாலும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. வட மற்றும் தென் துருவங்களுக்குப் பிறகு மிகப்பெரிய நன்னீர் இருப்பு உள்ள மலையாக இமயமலை உள்ளது. இமயமலையில் பனிப்பாறை உருகுவதை நன்கு புரிந்துகொள்ள ஆர்க்டிக் ஆய்வுகள் பயன்படுகின்றன.
எனவே, ஆர்க்டிக் ஆய்வு இந்திய விஞ்ஞானிகளுக்கு முக்கியமானதாகும். இந்தியா தனது முதல் ஆர்க்டிக் அறிவியல் பயணத்தை 2007ம் ஆண்டு தொடங்கியது. நார்வேயில் உள்ள ஸ்வால்பார்டில் உள்ள ஹிமாத்ரி சர்வதேச ஆர்க்டிக் ஆராய்ச்சித் தளத்தை இந்தியா நிறுவியது. அன்றிலிருந்து ஆர்க்டிக் பகுதியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனாவைத் தவிர, ஆர்க்டிக் ஆராய்ச்சி தளத்தை நிறுவிய ஒரே வளரும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத் தக்கது.
ஆர்க்டிக் பனி உருகுவது கடல் மட்டத்தை அதிகரிக்கிறது, இது கடலோர அரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் புவி வெப்பமயமாதல் காரணமாக தீவிரமான கடலோர புயல்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது .
இது 7,516.6 கிலோமீட்டர் கடற்கரை மற்றும் முக்கியமான துறைமுக நகரங்களைக் கொண்ட இந்தியாவை இது கணிசமாக பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது.
‘2021ம் ஆண்டில் உலகளாவிய காலநிலை நிலை ‘, இந்திய கடற்கரையோரத்தில் கடல் மட்டம் உலக சராசரி விகிதத்தை விட அதி வேகமாக உயர்ந்து வருவதாக 2021ம் ஆண்டுக்கான சர்வதேச காலநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி பயன்பாட்டில் இந்தியா உலகின் 3வது பெரிய எரிசக்தி ஆற்றல் நுகர்வு நாடாக இருக்கிறது. மேலும் உலகின், 3வது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகவும் இந்தியா உள்ளது.
போலார் சில்க் ரோடு என்ற பெயரில் டிரான்ஸ்-ஆர்க்டிக் கப்பல் வழித்தடங்களை சீனா ஏற்படுத்தியுளளது. மேலும் ரஷ்யாவைத் தவிர அணுக்கரு பனி உடைக்கும் கருவிகளைக் கொண்ட ஒரே நாடாக சீனா விளங்குகிறது.
இதன் விளைவாக, ஆர்க்டிக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. சீனாவின் சவாலை எதிர் கொள்ள இந்தியாவும் தனது ஆர்க்டிக் கொள்கையின் மூலம் ஆர்க்டிக்கில் தீவிர அக்கறை காட்டி வருகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் முக்கியத்துவம் பெறுகிறது.
அதன்படி, 2024 முதல் 2029 வரையிலான காலக்கட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்தியா-ரஷ்யா இணைத்து பணியாற்ற முடிவெடுக்கப் பட்டுள்ளது. ஆர்க்டிக்கில் அணுசக்தியால் இயங்கும் பனிக்கட்டி உடைக்கும் கருவிகளை இந்தியா பயன்படுத்துவதற்கும் ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதி, வடக்கு கடற்கரையில் சுமார் 5,500 கிமீ பரப்பளவில் உள்ளது. இது சுமார் 2 மில்லியன் சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. எட்டு ஆர்க்டிக் கவுன்சில் உறுப்பு நாடுகளில் ரஷ்யா மிகப்பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை (EEZ) கொண்டுள்ளது.
ரஷ்யாவின் ஆர்க்டிக்கில் உள்ள எண்ணெய் வயல்களில் ஏற்கனவே முன்னிலையில் இருக்கும் இந்தியா இந்த ஒப்பந்தத்தால் மேலும் ஆர்க்டிக்கில் வலிமை பெறுகிறது . ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள ரஷ்ய கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஆர்க்டிக் பகுதியில் பயிற்சி அளிக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்பு புவிசார் அரசியலின் விளையாட்டை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.