தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக எழுத்தாளர் சுப்பு இருப்பார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
திராவிட மாயை புத்தகத்தை எழுதிய சுப்புவின் சுயசரிதையான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, திராவிட அரசியல் என்பது வெறும் மாயை என்பதை, ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் சுப்பு என புகழாரம் சூட்டினார்.
தமிழக இளைஞர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை மீட்டெடுக்கும் வகையில், ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூலை, பாஜக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது :
இன்றைய தினம், ஐயா திராவிட மாயை திரு. சுப்பு அவர்களது சுயசரிதை நூலான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட அரசியல் என்பது வெறும் மாயை என்பதை, ஆதாரப்பூர்வமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாக வெளிப்படுத்தியவர், ஐயா திரு. சுப்பு அவர்கள். அவரது வயதொத்த மனிதர்களுடன் நெருங்கிய நண்பராக விளங்கும் அவர், தற்கால இளைஞர்களும், குருவாக ஏற்றுக் கொண்டு கொண்டாடும் அளவுக்கு, தனது எழுத்துக்களால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.
மிக நேர்மையான, வெளிப்படையான மனிதர். வருங்காலத்தில், தமிழகத்தில் அரசியலில் மாற்றம் உருவாகும்போது, அதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக, ஐயா. திரு. சுப்பு அவர்களும் இருப்பார்கள் என்பது உறுதி. அவரது சுயசரிதையான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ என்ற இந்த நூலில், அவரது 45 வயது வரையிலான வாழ்க்கை குறித்துப் பதிவு செய்திருக்கிறார். பல்வேறு துறைகளில், பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டு, அவற்றில் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும், தனது விசாலமான பார்வையின் மூலம், வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை, மிகச் சுவாரசியமாகக் கூறியிருக்கிறார். இந்த நூலின் இரண்டாவது பாகத்தையும் படிக்க, மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.
தமிழக இளைஞர்களிடையே படிக்கும் ஆர்வத்தை மீட்டெடுக்க @BJP4Tamilnadu
சார்பாக மேற்கொள்ளும் ஒரு சிறு முயற்சியாக, ஐயா திரு. சுப்பு அவர்களின், ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூலை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.