சீனாவின் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய எல்லைக்குள் இருந்து , கைலாஷ் சிகரத்தையும், ஓம் பர்வத சிகரத்தையும் பக்தர்கள் காண்பதற்கான நடவடிக்கைகளை உத்தர காண்ட் அரசு மேற்கொண்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மேற்கு இமயமலையில், 17500 அடி உயரமான மலைச் சிகரமாக உள்ள லிபுலேக் பாஸ், உத்தர காண்டில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது. இது, நேபாளத்தின் பியாஷ் பள்ளத்தாக்குடனும், திபெத்துடனும் இணையும் குமோவோன் பகுதியில் அமைந்திருக்கிறது. மேலும், இந்தியா- சீனா மற்றும் நேபாளம் இடையே உள்ள சர்வதேச மலைப் பாதையாகவும் இது இருக்கிறது.
இந்து மதத்தில் மிக முக்கியமான யாத்திரையாக இருக்கும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் மிக பழமையான பாதை இந்த லிபுலேக் பாஸ் ஆகும்.
திபெத்துக்கும் சீனாவுக்கும் இடையே பயணிக்கும் பண்டைய வர்த்தகர்கள், லிபுலேக்பாஸ் வழியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
1992 ஆம் ஆண்டு சீனாவுடனான வர்த்தகத்துக்காக திறக்கப்பட்ட முதல் இந்திய எல்லைச் சாவடி லிபுலேக் பாஸ் ஆகும்.
லிபுலேக்பாஸ், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல், செப்டம்பர் வரை எல்லை தாண்டிய வர்த்தகத்துக்காக இந்த பாதை திறக்கப் படுகிறது.
2020 ஆம் ஆண்டிலிருந்தே இந்துக்களின் புனிதமான கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான இரண்டு அதிகாரப்பூர்வமான இரண்டு பாதைகளும் மூடப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு,சீனா கொண்டு வந்த கடுமையான விதிகளால், நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள தனியார் வழியாக செல்வதற்கும் தடை ஏற்பட்டது.
2015ம் ஆண்டு , தனது சீன பயணத்தின் போது, பிரதமர் மோடி, லிபுலேக் பகுதியில் வர்த்தக மையத்தைத் திறக்க ஒப்பந்தம் செய்திருந்தார்.
முன்னதாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பாக, 2013 மற்றும் 2014ம் ஆண்டில் சீனாவுடன் கையெழுத்தான இரண்டு ஒப்பந்தங்களும் , முன் அறிவிப்பின்றி சீனா ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தங்களை முறித்து கொள்ள முடியாது என்பதை உறுதிபடுத்துகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தன.
மேலும், முதல் ஒப்பந்த்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் புனித கைலாஷ் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆதரவை வழங்க சீன அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது ஒப்பந்தத்தின் படி, தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் வரும் பக்தர்கள், நாது லா கணவாய் வழியாக சீனாவுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ சீனா அரசு அனுமதி தந்திருக்கிறது.
எனினும், தற்போது இரண்டு அதிகாரபூர்வ வழிகளும் மூடப்பட்ட நிலையில், கடந்தாண்டு சீனா தனது எல்லைகளை நேபாளத்தில் இருந்து திறந்தது. எனினும், வெளிநாட்டினருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கான விதிகளை கடுமையாக்கியது மற்றும் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியது உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், இந்தியர்கள் கைலாஷ் யாத்திரை மேற்கொள்ளும் நடைமுறையில் சிக்கல்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள தார்சூலாவில் உள்ள லிபுலேக் சிகரத்தில் இந்தியாவும் தனக்கான பகுதியில் ஒரு வர்த்தக மையத்தைத் தொடங்கியுள்ளது. அங்கிருந்து கைலாஷ் மலையை 50 கிமீ தொலைவில் இருந்து மிகத் தெளிவாகக் காண முடியும்.
இம்மாத தொடக்கத்தில், உத்தரகாண்ட் அரசு, இந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் இந்த இடத்திலிருந்து கைலாஷ் மலையை பக்தர்கள் பார்வையிட முடியும் என்று அறிவித்தது. இதற்காக லிபுலேக் வரை வாகனம் மூலம் செல்லவேண்டும். மேலும் அங்கிருந்து கைலாஷ் மலையைக் காண குறிப்பிட்ட இடத்தை அடைய சுமார் 800 மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும்.
இந்த அறிவிப்பு, இந்திய ஆன்மீக சுற்றுலாவுக்கு புத்துயிர் அளிப்பதோடு, பக்தர்களை இந்திய பாரம்பரியத்தையும் இணைக்கிறது. இந்திய எல்லைக்குள் இருந்து , கைலாஷ் சிகரத்தையும், ஓம் பர்வத சிகரத்தையும் தெளிவாக காண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த, லிபுலேக் பாதை திறக்கப் படுவதால், பக்தர்களுக்கு இந்திய பாரம்பரியத்துடன் கூடிய புதிய ஆன்மீக அனுபவம் ஏற்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இது போல மானசரோவர் விஷயத்திலும் இந்திய அரசு, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது இந்துக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.