ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா அருகே, தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.
தோடா மாவட்டம் தேசா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், பாதுகாப்பு படையினர் நேற்று இரவு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு அதிகாரி உட்பட பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது தோடா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.