நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி புரிந்ததாக, வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை கேரள மாநிலம், திருச்சூர் அருகே, சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து அவரை கரூர் அழைத்து சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு எம்.ஆர்.விஜயபாஸ்கரையும், அவரோடு கைது செய்யப்பட்ட பிரவீன் என்பவரையும், கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இருவரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக, வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ப்ரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் அவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.