தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குந்தா அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காலை 6 மணி நிலவரப்படி, குந்தா அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 89 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காலை முதல் 2 மதகுகளில் வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 33 சென்டி மீட்டர் கொட்டித் தீர்த்ததால், அவலாஞ்சி செல்லும் சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்ணை அகற்றி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அவலாஞ்சி சுற்றுலா மையம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.