நபிகள் நாயகத்தின் பேரன்கள் இமாம் உசேன் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை அனுசரிக்கும் வகையில், மொகரம் நாளை துக்க நாளாக சியா பிரிவு இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் தங்களது உடலை வருத்திக் கொண்டு வருகின்றனர்.
மொகரத்தையொட்டி, சியா பிரிவு இஸ்லாமியர்கள் கருப்பு உடை அணிந்து, சென்னை திருவல்லிக்கேணி ஜானி ஜான் கான் சாலை முதல் பீட்டர் சாலை வழியாக ஆயிரம் விளக்கு பள்ளிவாசல் வரை பேரணியாகச் சென்றனர். அப்போது, அவர்கள் துக்க பாடல்களை பாடியும், தங்களது உடல் மீது கத்தி போட்டும் ஊர்வலமாக சென்றனர்.
தஞ்சாவூர் காசவளநாடு புதூரில் உள்ளங்கை போன்ற உருவத்தை “அல்லா சுவாமி”, என வைத்து, தினமும் அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு வீடுகளுக்கு அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் எடுத்து செல்லப்பட்டது. அப்போது, எலுமிச்சை, ரோஜா மாலைகள் மற்றும் பட்டுதுண்டை சாத்தி வழிபட்டனர். மேலும், பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல், ரவுண்ட் ரோட்டில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு அசைன் உசேன் நினைவாக 83 -ஆம் ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அனுமந்த நகர், எழில் நகர் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.