மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சென்னை மற்றும் பல்வேறு நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர்
இதன் காரணமாக விமான சேவை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் பாதிப்பு காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டுள்ள போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.சென்னை மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணிகளில் அந்நிறுவனமானது முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.