இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க திறன் மேம்பாடு அவசியம் என டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீர்த்தி (கேலோ இந்தியா புதிய திறமைசாலிகளை அடையாளம் காணுதல்) 2-ம் கட்டத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியா ஒரு பன்முகம் மற்றும் திறமைமிகுந்த நாடு என்றார். அறிவாற்றல், மனிதவளம் மற்றும் திறமைக்கு இந்தியாவில் பஞ்சமில்லை என்றும் அவர் கூறினார்.
நகரங்கள் மட்டுமல்லாது, வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தொலைதூரப்பகுதிகள், கடலோரப்பகுதிகள், இமயமலை, பழங்குடியினர் பகுதிகளும் தரமான விளையாட்டு வீர்ர்களை கொண்டதாக உள்ளன என்று குறிப்பிட்டார்.
இதுபோன்ற திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை மேம்படுத்துவதே கீர்த்தி திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
நமது வாழ்க்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத்துறையில் இந்தியாவை வல்லரசாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், திறமையான வீரர்களுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் பெறும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.