வங்கக்கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா, ஆந்திரா கடலோரத்தில் இருந்து வட மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னம் ஒடிசா பாரதீப், கோபால்பூர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கிலும், ஆந்திரா கலிங்கப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிழக்கு, வட கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் ராட்சத அலைகள் எழக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.