நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதையொட்டி பட்ஜெட் நகலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட் தொடர்பான தகவல்களை அவர் குடியரசுத் தலைவரிடம் விளக்கினார். பின்னர், அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தயிரும் சீனியும் கலந்த இனிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.
மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் இது தேர்தலைக் கருத்தில்கொண்ட பட்ஜெட்டாகவும் அமைய வாய்ப்புள்ளது.
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு மூலதனச் செலவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா முறியடித்துள்ளார். அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.