இந்தியாவில் பா.ஜ., இவ்வளவு பெரிய வளர்ச்சியை எப்படி எட்டியதோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., வளரும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, மாதந்தோறும் மின்சார அளவீட்டைக் கணக்கெடுத்தால் மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 200 யூனிட் பயன்படுத்தினால் மாதக்கட்டணம் 450 ரூபாய்; அதுவே இரு மாதங்களுக்குக் கணக்கிட்டுக் கட்டினால், 400 யூனிட்டுக்கு 1440 ரூபாய்.
அதாவது மாதந்தோறும் எடுத்தால், இரு மாதங்களுக்கு 900 ரூபாய் செலுத்தினால் போதும்; ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது, 1440 ரூபாயாகி, கூடுதலாக 540 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதையும் காரணமாக ஏற்க முடியாது.
வெளிநாட்டு முதலீடு தமிழகத்தில் மிகவும் குறைவு. இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 157 கோடி மட்டுமே முதலீடு ஆகியுள்ளது; மகாராஷ்டிராவில் ரூ.ஒரு லட்சத்து 25,101 கோடியும், குஜராத்தில் 60 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலும் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது.
இதை மறைத்துவிட்டு, மத்திய அரசின் மீது பழி போட, ‘இதையெல்லாம் கொடுங்கள்’ என்று முதல்வர் ‘ட்வீட்’ போடுகிறார். உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றிப் பேசினால், பா.ஜ., சதித்திட்டம் தீட்டுவதாகச் சொல்வார்கள்.
இந்தியாவில் பா.ஜ., இவ்வளவு பெரிய வளர்ச்சியை எப்படி எட்டியதோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., வளரும். லோக்சபா தேர்தலில், 11.5 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறோம்.
ஆளும்கட்சியே 26 சதவீதம்தான் பெற்றுள்ளது. அதனால் அடுத்த 500 நாட்களில், தனித்து ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் உழைப்போம். மக்கள் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம்.
ரசாயனம் கலந்த மதுபானங்களை விற்கும்போது, கள்ளை ஏன் விற்கக்கூடாது என்று, கடந்த 2006ல், அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் நீதிபதி சிவசுப்ரமணியம் அறிக்கை அளித்தார்; அதேபோல, இப்போது ஐகோர்ட் நீதிபதியும், கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத்தான் நாங்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையாவது இதை முதல்வர் ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம், ஓர் ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமே உள்ளதால் நிதி குறைவாகவுள்ளது. தமிழகஅரசு நிலம் கொடுத்தால், தென் மாவட்டத்தில் ஒருபல்கலைக்கழகம் கொண்டு வரத்தயாராகவுள்ளோம்.
யார் யாரையோ பா.ஜ., கட்சி என்று சொல்லி, தி.மு.க.,வினர் பட்டியல் வெளியிடுகிறார்கள். நாங்கள் ‘தி க்ரைம் முன்னேற்றக்கழகம்’ என்று ஆவணத்தை வெளியிடுகிறோம்.
மொத்தம் 18 பக்கங்கள் உள்ள இந்த ஆவணத்தில், தி.மு.க., நிர்வாகிகள் பெயர், போட்டோ, என்ன குற்றம் செய்துள்ளார், தேதி உள்ளிட்ட விபரங்களைக் குறிப்பிட்டுள்ளோம்.
போதைப் பொருள் கடத்தியது, கள்ளச்சாராயத் தொடர்புகள், அரசியல் படுகொலை, வியாபாரிகளிடம் மோசடி என 112 பேருக்கும் மேற்பட்டோர், பெரியளவில் க்ரைம் செய்தவர்கள். அதிலும் இந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பு, இந்த குற்றங்களை செய்தவர்கள் எனத் தெரிவித்தார்.