திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, முற்பகல் 11 மணியளவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ‘வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம்’ என்ற இலக்குடன் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, தனது உரையைத் தொடங்கினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தலா 12 மாதம் வீதம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில், வேலைவாய்ப்பு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், ஒருமுறை 6 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பயிற்சி செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.