பீகார் மாநிலத்தின் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து விதமான வளர்ச்சிக்காக பூர்வோதயா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
குறிப்பாக, பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பீகாரின் கயா முதல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி மையம் உருவாக்கப்படுவதுடன், பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை மேம்படுத்துப்படுவதுடன், சாலை இணைப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி பாட்னா – பூர்னியா விரைவுச் சாலை, பக்சர் – பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா – ராஜ்கிர் – வைஷாலி – தர்பங்கா சாலை மேம்படுத்தப்படுவதுடன், பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதல் இருவழிப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு 26 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.