நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, கிராமப்புற மேலாண்மை, எரிசக்தி உள்ளிட்ட 9 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மூலதன செலவினத்துக்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
நாட்டின் பணவீக்கம் சீராக இருப்பதாக கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 சதவீத இலக்கை நோக்கி முன்னேறுவதாக தெரிவித்தார். பணிபுரியும் பெண்களின் நலனுக்காக மகளிர் விடுதி கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த கடனுதவி 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் முதன்முறையாக இணையும் ஊழியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மூன்று தவணையாக நேரடி பண பயன்பாட்டு திட்டத்தின் மூலம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டும் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைவர் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 500 பெரிய நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு,
அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், ஒருமுறை 6 ஆயிரம் ரூபாயும் விடுவிக்கப்படும் என கூறினார்.
கைப்பேசி, சார்ஜர் மீதான சுங்கவரி 15 சதவீதமாகவும், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான சுங்கவர 6.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தனிநபர் வருமான வரியை பொறுத்தமட்டில், 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்தார்.
3 லட்சத்தில் இருந்து 7 லட்ச ரூபாய் வரை 5 சதவீதமும், 7 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என அவர் கூறினார்.
10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதமும்,12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும், 15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீதமும் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என நிதியமைச்சர் கூறினார்.
மேலும் வருமான வரி செலுத்துவோருக்கான நிலையான கழிவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.