மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள முத்தா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் அப்பகுதியில் இயங்கிவந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. அப்போது இசட் பாலம் அருகே மின்சாரம் தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனேயில் உள்ள அதர்வாடி கிராமத்தில் கனமழை காரணமாக பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பால்கர் மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.