சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், சுரங்க உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் ராயல்டியானது, வரியாக கருத்தப்படாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு, பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த வகையில், ராயல்டியை வரியாக கருத முடியாது என்றும், ஏற்கெனவே இந்தியா சிமென்ட்ஸ் எதிர் தமிழக அரசு வழக்கில், ராயல்டியை வரியாக உச்சநீதிமன்றம் கருதியது தவறு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246-இன்படி, சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளையில், இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டார். ராயல்டியும் வரியாகதான் கருதப்படும் என்றும், 1989-ஆம் ஆண்டில் இந்தியா சிமென்ட்ஸ் வழக்கில் சரியான முறையில் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.