உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வகை செய்யும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு 360 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், உயர்கல்வி பயலும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவது போல, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி அரசுப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த 360 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைக்கப்படுவதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.