திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் மூன்று தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் போதிய மின்சாரம், குடி தண்ணீர் சாலை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர்.
ஏலகிரி மலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் நிலாவூரை அடுத்த காரைபாறை வட்டத்தில் கடந்த மூன்று தலைமுறை காலமாக 25-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள், சாலை வசதி, குடிநீர் , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு பாடங்களை மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கின்றனர். மேலும், இங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வெளியே செல்லாமல் ஆடுமாடுகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.