டெல்லியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
டெல்லி முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வெள்ள நீரை வெளியேற்றி 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கல்வியமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அரசின் அலட்சியமே 3 மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமென குற்றச்சாட்டிய மாணவர்கள், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.