பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய்குமார், முகிலன், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.