பீகாரில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த மாநில அரசு மேற்கொண்ட முடிவை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு நடத்தி, எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தியது.
இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மாநில அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பீகார் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், இந்த வழக்கை செப்டம்பரில் விரிவாக விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தது.