ஐஏஎஸ் பயிற்சி மைய தரைதளத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய டெல்லி காவல் துணை ஆணையர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லி பழைய ராஜேந்தர் நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய தரைதளத்தில் வெள்ளம் புகுந்ததால் தேர்வுக்குத் தயாராகி வந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்தப் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவரை ஏற்கெனவே போலீஸார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், வெள்ளத்தின்போது அந்த வழியாக வாகனத்தில் சென்ற நபர், பயிற்சி மைய கதவில் வேகமாக மோதியதால்தான் கதவு உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளே சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அந்த வகையில், வாகன ஓட்டுநர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய டெல்லி காவல் துணை ஆணையர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.