கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 2 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 2 மணியளவில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முண்டகைக்கு செல்லும் பாலம், மண்சரிவில் அடித்து செல்லப்பட்டதால் மீட்புக்குழுவினரால் அப்பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
மீட்புப்பணிக்காக கோவை மாவட்டம், சூலூரில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாடு விரைந்துள்ளன. மேலும், மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு, வயநாடு விரைந்துள்ளது. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்பட 250 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுளனர்.
வைத்திரி, மேப்பாடி, மானந்தவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதல் மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.