பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடும் போட்டியில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்றுள்ள ஒரே இந்தியர் என்ற அசாத்திய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் மனு பாக்கர். தற்போது உலகம் முழுவதுமாக ஒலிக்கும் பெயராக மாறியுள்ள மனு பாக்கர் யார்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய அளவில் விளையாட்டுகளில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம்… விட்டுக்கொடுத்து விளையாடுவதை தாண்டி, விடா முயற்சியுடன் ஒன்றை சாதிக்கும் திறன் கொண்ட ஹரியானா விளையாட்டு வீரர்களுக்கு திறன் மட்டும் அல்ல, பலமும் கொஞ்சம் கூட தான்.
அப்படி ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த மனு பாக்கர், பள்ளி பருவத்தில் ஸ்கேட்டிங், டென்னிஸ், பாக்ஸிங் என பல விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டிருந்த மனு பாக்கர், 2016 ரியோ ஒலிம்பிக்கின் போது தான் ஷூட்டிங் மீதான ஆர்வத்தை உணர்ந்துள்ளார்.
தற்போது, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், இந்தியாவுக்காக 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தகுதி சுற்றிலேயே தனது துப்பாக்கி பழுதானதால், அப்போட்டியில் இருந்து வெளியேறினார் மனு பாக்கர்.
இதனால், மனம் உடைந்து போன அவர், என்ன செய்திருக்கிறார் தெரியுமா? கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதையை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். “உனக்கு என்ன செய்ய தோன்றுகிறதோ அதை செய், மற்றவரை பற்றி யோசிக்காதே” என்பதை ஆழமாக உணர்ந்த அவர், இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கு கடுமையான பயிற்சி எடுத்துள்ளார்.
தற்போது அதற்கு பலனாக 2 வெண்கல பதக்கங்கள் வென்று 141 கோடி மக்களின் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார் மனு பாக்கர்.
ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் நூலிழையில் வெள்ளி பதக்கத்திற்கான வாய்ப்பை நழுவ விட்டாலும், ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று, முதல் இந்தியர் என்ற சாதனையையும் மனு படைத்திருக்கிறார். வெற்றிக்கு பிறகு பேசிய மனு சொன்னது என்ன தெரியுமா?
எப்போதும் எனக்கும் மேலாக ஒரு சக்தி இருப்பதாக உணருகிறேன். நம்புகிறேன் என மனு சொல்லி இருப்பது, அவருக்கு ஆன்மிகத்தின் மீதான ஈடுபாடு இருப்பதையும், நம்மை மீறிய சக்தி இருப்பதால் தான், நினைப்பவை அனைத்தும் நிரூபணமாகி இருக்கிறது.
கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் 2016 இல் மல்யுத்த வீராங்கனை ஷாக்ஷி மாலிக், 2020 இல் பளு தூக்கு வீராங்கனை மீராபாய் சானு ஆகிய பெண்களே இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளனர்.
அதே போல தொடர்ந்து மூன்றாவது முறையாக, 2024 பாரிஸ் தொடரில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்து, மூவருக்குமான ஒற்றுமையை பிரதிபலிக்க செய்துள்ளார் மனு பாக்கர்.