தமிழக கல்லூரிகளில் பேராசிரியர்கள் போலி நியமனத்துக்கு காரணமான அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் 1.50 லட்சம் கனஅடி அளவுக்கு செல்கிறது. கடலில் கலக்கும் இந்த தண்ணீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையையும் இந்த திராவிட மாடல் அரசு செய்யவில்லை.
தமிழக மக்களிடம் பொய்களை பரப்புகின்ற திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் மோசனமான நிலைக்கு சென்று விடும். எனவே, திராவிட மாடல் திமுக அரசை அரசியலில் இருந்து வேருடன் அகற்ற வேண்டும்.
திமுகவின் எம்பிக்களான தயாநிதிமாறன், கனிமொழி ஆகியோர் பாராளுமன்றத்தில் பேசும்போது, தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டாம் என நாங்கள் கூறினால் என்னாகும் என பேசியுள்ளார்கள். நீங்கள் திமுக செயற்குழுவை கூட்டி சொல்ல வேண்டியது தானே, அப்படி சொன்னால் திமுகவும், தமிழக அரசும் இருக்காது.
ஜிஎஸ்டி வரியில் மாநில அரசின் நிதியை மத்திய அரசு ஒரு பைசா கூட எடுத்துக்கொள்ளுவது கிடையாது. முழுவதும் மாநில அரசுக்களுக்கு தான் வருகிறது. மத்திய அரசுக்கு வரும் வரித்தொகையில் தான் தமிழகத்துக்கான தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர் பொன்முடி நிர்வாகத்தில் 292 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் 10 கல்லூரிகளில் பேராசிரியராக உள்ளார். ஊழல் நிறைந்த ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தால் இது தான் நடக்கும். இதனால் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பொறுப்பற்ற முறையில் அரசை நடத்தும் இந்த ஆட்சியை 2026-ம் ஆண்டு தூக்கி எறிய வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது. இதை விட்டு விட்டு மத்திய அரசை குறை சொல்லுவதை நிறுத்த வேண்டும் என்றார்.