வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 மோப்ப நாய்கள் அழைத்து செல்லப்பட்டன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களே மண்ணில் புதைந்ததால் மேலும் 250க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து உடல்களை மீட்கும் பணியில் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சோ்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவில் மாயமானவர்களின் தொலைபேசி ஜிபிஎஸ் சிக்னல் வாயிலாக அவா்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய் உதவியுடன் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 மோப்ப நாய்கள் வயநாடுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.