ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளான நிலையில், அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு- காஷ்மீரிலும், லடாக்கிலும் மாற்றத்துக்கான புதிய சகாப்தம் தொடங்கியதாக கூறியுள்ளார்.
இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் இலக்கை அடையும் வகையில், ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ச்சியில் பின்தங்கிய பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம், வாய்ப்புகள் ஜம்மு- காஷ்மீரில் கிடைத்ததாகவும் அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக ஜம்மு- காஷ்மீரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊழல் முடிவுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர்,
காஷ்மீர், லடாக் மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவில் பூர்த்தி செய்வோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.