தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், எளாவூர், மாதர்பாக்கம், ஈகுவார் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரவலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து மழை நீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மயிலாடுதுறை, குத்தாலம், கோமல், மங்கைநல்லூர், கனிவாசல், வடகரை, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. செம்பனார்கோவில் , தரங்கம்பாடி , திருக்கடையூர் போன்ற பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.