பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த விளையாட்டு போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடியதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக 50 கிலோ எடைப்பிரிவு போட்டியில் களம் கண்டார் வினேஷ் போகத். துடிப்பான ஆற்றலால் அடுத்தடுத்து சுற்றுகளை வென்ற வினேஷ் போகத் காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்டது உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆவார்.
ஜப்பானிய வீராங்கனையான யு சுசாகி இதுவரை விளையாடிய சர்வதேச மல்யுத்த போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியை சந்தித்தது இல்லை. கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற யு சுசாகி, இதுவரை விளையாடிய 84 போட்டிகளில் ஒரே தோல்வியை மட்டுமே சந்தித்தார். அந்த ஒரே தோல்வியும் வினேஷ் போகத்திற்கு எதிராக பாரிஸ் ஒலிம்பிக்கில் கண்ட தோல்வியே ஆகும்.
இப்படியாக அடுத்தடுத்து முன்னேறி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத், எடைப் பரிசோதனை மேற்கொண்ட போது 100 கிராம் உடல் எடை கூடி இருந்ததால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மூலம் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விதி மீறலில் ஈடுபட்டாரா? அல்லது எதிர்பாராத விதமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா என இந்தியா முழுக்க கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்… இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் விதிகள் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறார், தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் தலைவர் லதா
பொதுவாகவே தகுதி சுற்றுப்போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக ஒருமுறையும், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவும், வீரர்களுக்கு எடை பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அப்படி இருக்கும் போது 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வந்த வினேஷ் போகத் 2 கிலோ எடை கூடியிருப்பதை உணர்ந்ததால் இன்று காலைக்குள் அந்த 2 கிலோ எடையை குறைத்து விடவேண்டும் என எண்ணி இரவு முழுவதும் கடின உழைப்பை போட்டிருக்கிறார்.
சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங் குதித்தல், தலை முடியை குறைத்தது, ரத்தம் எடுத்தது உள்ளிட்டவைகள் மூலம் எடைக் குறைப்பில் ஈடுபட்ட வினேஷ் போகத்தால் அதிகபட்சமாக 1.85 கிலோ மட்டுமே குறைக்க முடிந்தது. இருப்பினும் பரிசோதனையின் போது அந்த 100 முதல் 150 கிராம் வரையிலான எடை, விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலையில், அவருடன் மோத இருந்த அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வினேஷ் போகத் ஒலிம்பிக் தரவரிசையில் கடைசி இடத்திற்கு தாள்ளப்பட்டுள்ளார், அவருக்கு பதக்கம் எதுவும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை அடுத்து, அவர் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் என்ற செய்தியும் இந்தியர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தகுதி நீக்கம் குறித்து பலரும் பல தரப்பு கருத்துகளை தெரிவித்து வந்தாலும், இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தனது கருத்தை காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதாவது இதற்கு பின்னால் சதி இருக்கிறது என்றும், தங்களை போன்ற குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்கள் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைத்துள்ளோம். 100 கிராம் எடை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை, பசி, தூக்கம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்த தங்களுக்கு தெரியும். ஆனால் இது இந்தியா விளையாட்டில் சாதிப்பது பிடிக்காதவர்கள் யாரோ செய்கின்ற சதி என தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் வினேஷ் போகத் தரப்பில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பிடம் முறையீடு செய்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்து, கடந்த ஆண்டு டெல்லியில் இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றது முதல், தற்போது வரை அவரது வாழ்க்கை பயணம் என்பது வாழ்வா சாவா என்பது போல தான் இருந்துள்ளது.
2016 ரியோ மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர்களில் காலிறுதிப் போட்டியுடன் வெளியேறிய வினேஷ் போகத், இந்தமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயணம் உணர்வுப் பூர்வமானது. நாடு முழுவதும் அவரது தங்க பதக்கதிற்காக காத்துக் கொண்டிருந்த போது, அவரது தகுதி நீக்க செய்தியானது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்தையும் கடந்து அவர் மீண்டு வரவேண்டும் எனவும் அனைவரின் பிரார்த்தனைகளும் வினேஷ் போகத் நோக்கி இருக்கிறது.