வங்க தேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது. இராணுவ நிர்ப்பந்தத்தில் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா , இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்க தேசத்தின் நிறுவனரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசினா, வங்க தேச வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதமராவார்.
1960ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், டாக்கா பல்கலைக்கழகத்தில், படித்த ஷேக் ஹசீனா, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தனது தந்தையின் அரசியல் தொடர்பாளராகவும் செயல் பட்டுவந்தார்.
1971ம் ஆண்டில், வங்க தேச சுதந்திரத்திற்கு வழிவகுத்த விடுதலைப் போரின் போது ஷேக் ஹசீனாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சிறிது காலம் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்தனர்.
1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய வங்கதேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், அவரது மனைவி மற்றும் மூன்று மகன்களை ராணுவத்தினர் அதிபர் இல்லத்தில் வைத்தே படுகொலை செய்தனர்.
அப்போது, ஷேக் ஹசீனா வெளிநாட்டில் இருந்தால் தப்பித்தார் என்றே சொல்லவேண்டும். எனினும், ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்ப தடை விதிக்கப்பட்டிருந்தது.
வங்க தேசத்தின் மிகப்பெரிய அரசியல் அமைப்பான தனது தந்தையால் நிறுவப்பட்ட அரசியல் கட்சியான அவாமி லீக்கை வழிநடத்த ஷேக் ஹசீனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981ம் ஆண்டு ஷேக் ஹசீனா வங்க தேசத்துக்குத் திரும்பினார். திரும்பியவுடன், ஜனநாயகத்தின் குரலாக மக்களின் குரலாக அரசியல் பணியாற்றினார். வங்க தேசத்தின் ராணுவ ஆட்சியின் கொடுங்கோல் ஆட்சியை கடுமையாக எதிர்த்தார். இதனாலேயே பலமுறை ஷேக் ஹசீனா வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார்.
வங்க தேச மக்கள் ஷேக் ஹசீனாவின் பின் அணி திரண்டனர். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்க தேசத்தின் கடைசி இராணுவத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஹுசைன் முகம்மது எர்ஷாத், ஷேக் ஹசீனா விடுத்த இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து பதவி விலகினார்.
ஆட்சியில் இருந்த கலிதா ஜியாவின் தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) தேர்தல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய ஷேக் ஹசீனா நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தார். இது நாட்டில் அரசியல் போராட்டத்துக்கும் அமைதியின்மைக்கும் வழிவகுத்தது. இறுதியில் ஜியா இராஜினாமா செய்தார்.
ஜூன் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஷேக் ஹசீனா வங்க தேசத்தின் பிரதமரானார். பிரதமராக தனது முதல் இன்னிங்சில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் முன்னுரிமை தந்து செயல்பட்டார். 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜியாவிடம் தேர்தல் தோல்வி அடைந்தார். வங்க தேச பிரதமர் ஒருவர் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முழு ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனா கைது செய்யப் பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையிலும் சர்வதேச பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேர்தலில் 2014ம் ஆண்டு மூன்றாவது முறையாக வங்க தேசத்தின் பிரதமரானார் ஷேக் ஹசீனா.
2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் எதிர்த்து போட்டியிட யாருமில்லாத நிலையில், நான்காவது முறையாக மீண்டும் வங்க தேசத்தின் பிரதமரானார் ஷேக் ஹசீனா.
மியான்மரில் வன்முறையில் இருந்து தப்பி வந்த ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் மற்றும் உதவி வழங்கியதற்காக ஹசீனா பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசம் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. 2009ம் ஆண்டு முதல் ஷேக் ஹசீனாவின் தலைமையின் கீழ் நம்பகமான பொருளாதார வெற்றியை அடைந்திருக்கிறது.
ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வங்க தேசத்தை உருவாக்கி இருந்தார் ஷேக் ஹசீனா.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வங்க தேசத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது கடந்த 20 ஆண்டுகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
நாட்டின் சொந்த நிதிகள், கடன்கள் மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பயன்படுத்தி, கங்கையின் குறுக்கே 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்மா பாலம் உட்பட மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றி இருந்தார் ஷேக் ஹசீனா .
எனினும், அவர் ஆட்சியின் மீதான வெறுப்பை எதிர்க்கட்சிகள், மக்களிடம் வளர்த்து வந்தனர் . அதன் கொந்தளிப்பே இப்போது வங்க தேசத்தில் நடந்த போராட்டங்களும் வன்முறைகளும்.
மீண்டும் ராணுவ ஆட்சிக்கு வந்துள்ள வங்க தேசம் இனி எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை வங்க தேச மக்களை விட ராணுவமே முடிவு செய்யும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.