நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக திண்டுக்கல்லில் நடந்த மொய் விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் முஜீப் பிரியாணி, திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் சார்பில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் நடைபெற்ற மொய் விருந்தில் தோசை, பரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் நெய் சாதம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் உணவு அருந்திய பிறகு இலைக்கு அடியில் தங்களால் முடிந்த உதவித் தொகையை வைத்து சென்றனர்.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் சிறுவர் ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த சில்லறை காசுகளை நிவாரண நிதியாக வழங்கினார். மொய் விருந்து மூலம் கிடைக்கப்பெறும் நிதி வயநாடு நிவாரணத்திற்காக அனுப்பி வைக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.