ஏமனில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா, ஹஜ்ஹா, டைஸ் உள்ளிட்ட நகரங்களில் அதிகனமழை பதிவாகி உள்ளது.
இதனால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாலும் அப்பகுதி மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடுமையான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 45-பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தொடர் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.