ஈரோட்டில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அறங்காவலரின் உறவினர் திருடிச் சென்று விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், வரும் 22 -ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக, பக்தர்கள் பித்தளை தகடுகள், கலசங்கள், மணிகள், தட்டுகள் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஆனால், அவைகளை அறங்காவலர் தங்காயம்மாளின் பேரன் பிரதீப், தனது நண்பர் உதவியாடு திருடிச் சென்று விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து இணை ஆணையர் பரஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் திருப்பூர் கடையில் இருந்து மீட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.