கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும்
மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதேபோல், தலைநகர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மருத்துவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்முறைக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களும் மருத்துவர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மருத்துவர் ஒருவர், மருத்துவமனையில் கூட பெண் மருத்துவர்கள் பாதுகாப்பின்றி இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.