வேலூரில் இரண்டாவது நாளாக பெய்த கனமழையின் காரணமாக காட்பாடி அருகேயுள்ள தாழ்வான பகுதிகளை மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்தது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக காட்பாடி, முத்தமிழ் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாநகராட்சி ஆணையர் ஜானகி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோருடன் பாதிப்படைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து இரவு நேரத்தில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக மீண்டும் அதேபகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.