கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவந்த முதுநிலை மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சந்தீப் போஷ், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகிய அடுத்த சில மணிநேரத்தில், வேறொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக அவர் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தீர்வு காணாவிட்டால், சிபிஐவசம் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இந்நிலையில், பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரி முதல்வரைத்தான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
மேலும், அவர் பதவி விலகிய ஒருமணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.
மேலும், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.