அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் உள்ள கடைமடை குளங்களில் இன்னும் சோதனை ஓட்டங்கள் நடைபெறாததால் இந்த மாத இறுதிக்குள் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வறட்சியாக உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
இதற்காக ஆயிரத்து 652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகளாகியும் திட்டம் பயன்பாட்டிற்கு வராததால் அரசியல் கட்சியினர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்த நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் உள்ள கடைமடை குளங்களில் இன்னும் சோதனை ஓட்டங்கள் நடைபெறவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனார்.
சாலை பணியின்போது உடைக்கப்பட்ட குழாய்கள் 5 மாதங்களாகியும் சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள மக்கள், அமைச்சர் முத்துசாமி கூறியபடி இம்மாத இறுதிக்குள் திட்டம் செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினர்.
அமைச்சரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.