ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா செல்லுலார் கட்டண உயர்வுக்குப் பிறகு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர். குறைந்தவிலை திட்டங்களால், வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள BSNL, அடுத்த சில மாதங்களில் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சமீபத்தில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 4ஜி நெட்வொர்க் தயாராக உள்ளதாகவும், இந்த நெட்வொர்க்கை 5ஜியாக மாற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் என்றும் உறுதி அளித்திருந்தார். அதனால், பிஎஸ்என்எல் சேவை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை ஆர்வமுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 15 வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை வந்திருந்த நிலையில் கென்யா, மொரிஷியஸ், பப்புவா நியூ கினியா மற்றும் எகிப்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இதற்காக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை நெட்வொர்க்கில் பயன்படுத்துவதற்கு ஐடி நிறுவனமான டிசிஎஸ் மற்றும் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான சி-டாட் தலைமையிலான கூட்டமைப்புடன் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வந்தது.
2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள் உள்நாட்டில் சோதனை செய்து விட்டு வெளிநாட்டில் 4ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான அரசின் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இதற்கிடையே BSNL கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறது.
இப்போது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் BSNL, 4ஜி நெட்வொர்க்கின் ஒரு லட்சம் டவர்களை கட்டி முடிக்க அரசு இலக்கு வைத்துள்ளது.
ஏற்கெனவே, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் 15,000, 4 ஜி டவர்கள் கட்டப் பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 80,000 ஆக உயர்த்தவும் BSNL திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 21,000, 4 ஜி டவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச்சுக்குள் 4G சேவையை வழங்குவதுடன், அதற்கடுத்த 8 மாதங்களுக்குள் BSNL தனது 5G சேவைகளை வழங்க தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் முதலீடுகள் மற்றும் சந்தைப் பங்கு அதிகரித்துள்ள நிலையில், ஜியோவுடன் போட்டிக்கு தயாராகி வருகிறது BSNL.
சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை முன் வைத்த பிரதமர் மோடியின் இலக்கை சரியாக பயன்படுத்தி தொலைதொடர்பு சந்தையில் BSNL முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.